நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 33 ரன்களிலும், முன்ரோ 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கிராண்ட்ஹோம் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் அபார பந்து வீச்சால் ரன்களை எடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். கடைசி நேரத்தில், டிம் செய்ஃபர்ட் ஓரளவு தாக்குபிடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பிறகு , 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி, 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். 17 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 57 ரன்களும், ஷிவம் டூபே 8 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில், இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டனில் வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.