இலங்கை அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பெண் போட்டியிடுகிறார். தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், அவர்களின் தலைமையை ஏற்கவும் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.இலங்கையின் மக்கள் தொகையில் தற்போது 52% பெண்கள் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் சட்டம், மாகாணத் தேர்தல் சட்டம் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீட்டையும் அளித்து உள்ளன.
பல வளர்ந்த நாடுகளே பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க மறுத்த சூழலில், 1931ஆம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த நாடு இலங்கை. 1960ல் சிரிமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், உலகில் முதல் பெண் பிரதமரைக் கொடுத்த தேசம் என்ற பெருமையை இலங்கை பெற்றது. இலங்கையில் அதிபர் பதவி கடந்த 1978ல் உருவாக்கப்பட்ட பின்னர், 1988ல் சிரிமாவோ பண்டாரநாயக்க அந்தப் பதவிக்குப் போட்டியிட்டார். அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா 1994ல் இலங்கையின் முதல் பெண் அதிபரானார், இவர் 1999ல் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.
அதன் பின்னர் இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு பெருமளவில் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு பெண்ணும் அதிபர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கவே இல்லை. இந்தச் சூழலில், மீண்டும் அதிபர் தேர்தலை எதிர் நோக்கியுள்ள இலங்கையில் சோசலிச கட்சியின் சார்பில், அஜந்தா பெரேரா – என்ற பெண் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு உள்ளார்.
இலங்கையின் புகபெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், இலங்கை மற்றும் பிஜி ஆகிய நாடுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளவர் அஜந்தா பெரேரா. தனது பள்ளிக் கல்வியை சென்னையின் குட்ஷெப்பர்டு பள்ளியில் பெற்ற இவர், ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இலங்கையில் தமிழர் பிரச்னைகள் தீர்க்கவும், தமிழர்களின் தலைமையை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக இவர் கூறி உள்ளது இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இவருக்கு எதிராக ராஜபக்ஷவின் கட்சி அவரது சகோதரர் கோத்தபய-வை அறிவித்து உள்ளது. இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேன, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் கட்சிகள் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனவே இலங்கை அதிபர் தேர்தலில் கட்சிகளின் வியூகங்கள் என்ன என்பதை அரசியல் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி உள்ளனர்.