சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ‘அம்மா’ என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வந்த வந்த அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சைதாப்பேட்டை மாந்தோப் பள்ளி மற்றும் சிஐடி நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இருந்த ‘அம்மா’ என்ற பெயர்களும் அடுத்தடுத்து மறைக்கப்பட்டுள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என தமிழக மக்கள் அன்பாக அழைத்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகும் நிலைத்திருக்கும் புகழை பார்த்து, பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், உணவகத்தில் இருக்கும் அம்மா பெயரை மறைத்து அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவினரின் இந்த செயல்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த, அவரிக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மீனவர்கள் பெரும்பாலானோர் மருத்துவம் பார்த்து பயனடைந்து வந்த மினி கிளினிக்கில், அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அம்மா மினி கிளினிக் சேதப்படுத்தப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்னும் உன்னத நோக்குடன், அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும், சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்தில் இருந்த கல்வெட்டை, கடப்பாரையால் சேதப்படுத்தி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகார திமிரில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யக்கோரி கோஷமிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.