முறைப்பாசனத்தின்படி வைகை அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை இந்த ஆண்டில் 2 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2 முறை தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பாசனப்பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56 புள்ளி 82 அடியாக உள்ளது. அதேசமயம் நீர்வரத்து வினாடிக்கு 682 கனஅடியாக இருப்பதாக பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.