தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்றம் செல்பவர்கள் அதிகளவில் சென்று வந்தனர். இங்குள்ள டாப் ஸ்டேஷன் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் மலையேற்றம் சென்றனர்.
அப்பொழுது அங்கு திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து குரங்கணியில் மலையேற்றம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் மலையேற்றம் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.