இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது….
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன . போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜேம்ஸ் வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில், தவுலத் ஜட்ரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஜோ ரூட், பேர்ஸ்டோ இணைந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்க்கையில் ஈடுபட்டனர். சதத்தை நோக்கி சென்ற பேர்ஸ்டோ 90 ரன்களில் குல்பதின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோ ரூட், இயான் மோர்கன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை நாலப்பக்கமும் விரட்டியதால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. மோர்கன், ரஷீத்தின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். சிறப்பாக விளையாடிய இயோன் மோர்கன் 56 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்து 148 ரன்களில் வெளியேறினார். 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் 17 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்தார்.
பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் ஓரளவு ரன்குவிக்க இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி மொத்தமாக 25 சிக்ஸர்களை அடித்து இதன்மூலம் சாதனை படைத்தது. இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தற்போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களுடன் நிதானமாக விளையாடி வருகிறது.