ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி கோலாகல தொடக்கம்!

பெங்களூருவில் “ஏரோ இந்தியா 2021” கண்காட்சியில், போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்திய காட்சியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர். விழாவில், விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 83 LCA தேஜஸ் போர் விமானங்கள் வாங்க, HAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை “ஏரோ இந்தியா 2021” கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். 80 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 540 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. பாதுகாப்புத்துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள், கடல்சார் கருவிகள், லேசர் சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், சமிக்ஞை கருவிகள், அலைக்கற்றை கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் உட்பட ஏராளமான நவீன ஏவுகணைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சர்வதேச விமான கண்காட்சியில் போர் விமானங்கள் வானுயர எழுந்து சாகசம் செய்த காட்சிகளை பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.

முன்னதாக விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் 130 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 83 LCA தேஜஸ் போர் விமானங்கள் வாங்க, HAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

Exit mobile version