தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பருவமழை பொய்த்தது, கோடை வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது என்பது குறித்தும், அதை போக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.