கொரோனா தொற்று மிக வேகமாக பரவுவதால் பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவும், கட்டாயம் முகக்கவசம் அணியவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
தியாகராய நகரில் நடைபெறும் கொரோனா காய்ச்சல் முகாம்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் லேசான அறிகுறி இருந்தாலே உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆயிரம் தன்னார்வர்வலர்கள் வீடு வீடாக ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தேசிய கடமையாக கருத வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஜெயந்தி, லதா, நிர்மல் ராஜ், அமிர்த ஜோதி ஆகியோர், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கீழ் அமைக்கப்படும், தலா 5 பேர் கொண்ட குழுக்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பள்ளிகளில் ஆய்வு செய்யவுள்ளது.