இனி நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த ஆலோசனை

டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், 75வது சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், 40 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில், அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலங்களவை அதிமுக தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர், அதிகமுகவின் நிலைப்பாடு குறித்த கருத்துக்களை ஆவணமாக வழங்கினர். இக்கூட்டத்தில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத தலைவர் சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தை, திமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகள் பங்கேற்கவில்லை.

Exit mobile version