கனடா நாட்டில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம் விளம்பரம் செய்யாமலே தங்களுக்கான விளம்பரத்தை தேடிக் கொண்டுள்ளது.
இன்று எங்கு பார்த்தாலும் விளம்பரம் எதிலும் விளம்பரம் என்ற நிலையாகி விட்டது. பயன்படுத்தும் பொருட்களை விற்க விளம்பரம் தேவைப்படுவதால் எங்கு சென்றாலும் விளம்பரம் போர்டுகள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இதில் சில நிறுவனங்கள் புதுவித முறையில் விளம்பரங்களை செய்து மக்களை ஈர்த்து வருகின்றன.
இதேபோல் கனடா நாட்டில் உள்ள விளம்பர நிறுவனங்கள் பிரபல சாலைகளில் உள்ள ஒரு பெரிய விளம்பர போர்டை பல லட்ச ரூபாய் கொடுத்து வாடகைக்கு வாங்கி அதில் தங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்து வந்துள்ளன.
இந்நிலையில் ஒரு தனியார் விளம்பர நிறுவனம் பெரிய போர்டை வாங்கி அதில் எவ்வித விளம்பரமும் செய்யாமல், வெள்ளை நிற பெயிண்டை மட்டும் அடித்துள்ளனர். அதனை மக்கள் நடமாடும் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். இதனை கண்ட மக்கள் என்னவென்றே புரியாமல் குழம்பித் தவித்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் வெள்ளை போர்டுகள் குறித்தும், அந்த விளம்பர நிறுவனம் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால் அந்த தனியார் நிறுவனத்திற்கு விளம்பரமே செய்யாமல் விளம்பரம் வந்துள்ளது…
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து மக்களுக்கு போரடித்து விட்டது. அதனால் சற்று வித்தியாசமாக நாங்கள் முயற்சி செய்துள்ளோம். இதனை கிறிஸ்துமஸ் பரிசாக கனடா நாட்டு மக்களுக்கு வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.