இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும். மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ அதிமுகவும் தமாகவும் சுமூகமான உறவில் உள்ளது. இரண்டு கட்சியினரும் ஒத்தக் கருத்துடன் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர், மேலும் மாநிலத்திலே வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களாக திமுகவினர் செயல்படுகின்றனர், மக்கள் ஏமாறும் சூழ்நிலையை திமுக எற்படுத்தியுள்ளது, திமுகவிற்கு எதிராக எதிர்மறை வாக்குகள் அதிகரித்துள்ளது’ என்று கூறினார். மேற்கொண்டு பேசிய அவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர் அறிவிப்பானது கூட்டணி கட்சிகள் கலந்து பேசிய பிறகு ஓரிரு நாட்கள் கழித்து அதிகாரப்பூர்வமாக கூறப்படும் என்றும் தமாக தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.
இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தமாக தலைவர் ஜி.கே வாசனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கலந்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் மக்கள் நலன் பிரச்சனைகள் பற்றியும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.