அதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்க நாள்

அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கையில், அதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முக்கிய அம்சமாக, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாளில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்திய அளவில் ஒரு மாபெரும் புரட்சியாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகு மாபெரும் போராட்டத்தில் அன்னைமொழி தமிழுக்காக  தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி  செலுத்துவது நமது விழுமிய கடமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழகம் முழுவதும் அதிமுக மாணவர் அணி சார்பில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் ஜனவரி 25ஆம் நாள் ’வீரவணக்க நாளாக’ நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தித் திணிப்பிற்கு எதிரானப் போராட்டம் 1937ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனால் 1940ஆம் ஆண்டில் கட்டாய இந்திக் கல்வியை அன்றைய மத்திய அரசு  விலக்கம் செய்தது. 1950ஆம் ஆண்டு நடப்பிற்கு வந்த இந்திய அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி, 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்திமொழி அரசுப் பணிமொழியாக விளங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இம்முயற்சி இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலையை கிளப்பியது, முக்கியமாக, தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. குறிப்பாக, 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாளில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதிக அளவில் மாணவர்களே இப்போரட்டத்தில் பங்கேற்றனர். அன்றைய அரசின் வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் தீவைப்பு போன்ற கலவரங்கள் அரங்கேறின. பலர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம்முடைய தலையாய கடமையாகும். ஆகவே, கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல், அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறையினர் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version