சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை, அதிமுகவில் இருந்து நீக்கவும், சசிகலாவுடன் பேசுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, பகட்டான வாக்குறுதிகள், பசுத்தோல் போர்த்திய புலிகளாய் மக்களிடம் நாடகமாடி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்து விடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, கழகம் இப்போது வலுவும், பொலிவும் பெற்றிருப்பதை பார்த்து முக்கியத்துவம் தேடிக்கொள்ளவும், அதிமுகவை அபகரிக்கும் முயற்சியிலும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய செய்வதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களின் தியாகத்தால் அதிமுக நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அழித்து கொள்ளாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு தேடியவர்களை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.