பொதுக்குழு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு, கடந்த 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்பது உறுதியாகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில் இத்தீர்ப்பு அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து தமிழகமெங்கும் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.