அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல், 35 அதிமுக மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
அதன்படி, இன்று 35 அதிமுக மாவட்டங்களுக்கான கழக அமைப்பு தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கிழக்கு, செங்கல்பட்டு கிழக்கு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நெல்லை, ஈரோடு மாநகர் மற்றும் புறநகர், சேலம் மாநகர் மற்றும் புறநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 35 மாவட்டங்களில், அமைப்புத் தேர்தல் நடைபெறுகிறது.
தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், அமைப்புத் தேர்தலை நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் ஓமலூரில் உள்ள அண்ணா திமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், வேட்பு மனு விநியோகத்தை, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், முதற்கட்ட அமைப்புத் தேர்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.