உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15, 16 ஆம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடுவோர் 25 ஆயிரம் ரூபாயும், மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
நகரமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் 10 ஆயிரம் ரூபாயும், நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 2 ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஐயாயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஐயாயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் மூவாயிரம் ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
வரும் 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.