தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க, இப்போதே பணியாற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு அதிமுக மடல்

அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஒரு மடல் வெளியிட்டுள்ளனர். அதில், மக்கள் நலனுக்காக எம்.ஜி.ஆரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எழுச்சிமிகு இயக்கம் தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 17 எனக் குறிப்பிட்டுள்ளது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டுத் தமிழர்களின் இதயங்களில் நிறைந்துவிட்ட அதிமுக 48-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ளது.

அண்ணாவின் மறைவுக்குப் பின் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில் கருணாநிதியை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக்கியதையும், அதற்கு மாறாகக் கருணாநிதி குடும்ப ஆட்சி, கொடுங்கோலாட்சி, ஊழல் ஆட்சி, அராஜக ஆட்சி, லஞ்ச, லாவண்ய ஆட்சி நடத்தியதுடன் எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கியதையும் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக தோன்றியபின் தீய சக்தியின் ஆட்சியை வீழ்த்தி, எம்ஜிஆர் தலைமையில் தெய்வ சக்தியின் ஆட்சி மலர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அதிமுகவைக் கட்டிக்காத்ததுடன் திமுகவைத் திசை தெரியாமல் ஆக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறப் பாடுபட வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிமுகவின் பொன் விழா ஆண்டான 2022 ஆம் ஆண்டிலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து புகழ் சேர்த்திட இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version