எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொள்ளவேண்டுமென கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் மிகச் சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்திருந்ததாகவும், கழகத்தின் உயர்வுக்காகவும், வெற்றிக்காகவும் அனைவரும் உறுதி பூண்டிருப்பதை ஆலோசனைக் கூட்டத்தில் காணமுடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கழகத்தின் அழைப்பை ஏற்று மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள் சிலர் சுட்டிக்காட்டிவாறு ஆங்காங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றப் பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வெற்றிக்கனியை மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் பொற்பாதங்களில் சமர்பிக்க உறுதிப் பூண்டுள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.