முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். போடிநாயக்கனூரில் திரண்டு இருந்த பொதுமக்கள், அதிமுக தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், தேனியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்று குறிப்பிட்டார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த முதலமைச்சர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று தேர்தல் அறிக்கை என்றும் விமர்சித்தார்.
கல்வித் துறையில் சிறப்பான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதை பட்டியலிட்ட முதலமைச்சர், உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
தேனியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிசாமி, தேனி பகுதியின் வளர்ச்சிக்காக நலத்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக திகழ அதிமுக அரசே காரணம் என்று கூறினார்.
பின்னர் தேவதானப்பட்டியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த முதலமைச்சர், இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த துரோகிகளுக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வத்தலகுண்டுவில் திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து, நிலக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார். மத்தியில் நிலையான ஆட்சி அமைய மாம்பழ சின்னத்துக்கும், துரோகிகளுக்கு பாடம் புகட்ட இரட்டை இலை சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, 304 தொழிற்சாலைகள் கிடைக்க அதிமுக அரசு ஏற்பாடு செய்துள்ளது என நிலக்கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரித்தார்.