பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை, கரும்புகடை, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட வேலுமணி, மகேந்திரனுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். சிறுபான்மையினருக்கு அதிமுக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜாதி கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பேசினார்.
பேசிக் கொண்டிருக்கும் போது மசூதியில் பாங்கு ஒலித்ததால் பேச்சை பாதியில் நிறுத்திய அமைச்சர் அது முடிந்தவுடன் மறுபடியும் தனது பேச்சைத் தொடங்கினார்.
இதேபோல், விருதுநகர் மக்களவை தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அருப்புக்கோட்டையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அருப்புக்கோட்டையில் உள்ள குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அருப்புக்கோட்டையும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என்றும் பிரேமலதா பேசினார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், சக்திமான் காப்பாற்றுவர் நினைத்து மாடியில் இருந்து குதித்து செத்து போவதும், ராகுல்காந்தி பிரதமராக வந்து இந்தியா காப்பாற்றுவர் என்று நினைத்து ஓட்டுபோடுவதும் ஒன்று தான் என்று விமர்சித்தார். தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தது திமுகதான் என்றும் விந்தியா தெரிவித்தார்.