அம்மா அரசின் திட்டங்களை முடக்க நினைக்கும் திமுக

அம்மா மினி கிளினிக், அம்மா உணவகங்கள் போன்ற அம்மா அரசின் திட்டங்களை முடக்க நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 சேலத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு விநியோக பணியை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர், தொண்டர்கள் பூர்த்தி செய்து வழங்கிய விருப்ப மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா மினி கிளினிக்குகளை முடக்க நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். அம்மா மின் கிளினிக்குகளில் ஆயிரத்து 840 மருத்துவர்கள், ஆயிரத்து 420 உதவியாளர்களை பணி நீக்கம் செய்யப்படுவதாக வரும் தகவலை அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகங்களை மூட திமுக அரசு தொடர்ந் து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். முதலில் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் பொருட்களை குறைத்த திமுக அரசு, பின்னர் உணவக ஊழியர்களின் எண்ணிக்கையும், ஊழியர்களின் சம்பளத்தையும் குறைத்துள்ளதாகவும் சாடினார்.

அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் மீது பொய் வழக்கு பதிவு திமுக அரசு அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடித்தனமாக செயல்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Exit mobile version