ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான உச்சநீதிமனறத்தின் உத்தரவின்படி, அதிமுகவின் பிரமானப் பத்திரத்தினை தேர்தல் ஆணையத்திடம் அளிப்பதற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் டெல்லி சென்றார். அவருடன் அதிமுகவின் எம்பி சி.வி.சண்முகம் அவர்களும் உடன் சென்றிருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவெடுக்கவேண்டும் என்றும் அதனை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவு இட்டிருந்தது. அதன் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவங்களும் பிரமானப் பத்திரங்களும் அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அனுப்பப்பட்டது. மேலும் இந்த படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அதிமுக அலுவலகத்திற்கு நேற்று இரவு 7 மணியளவில் அனுப்பப்பட்டிருந்தது. இதனை சேகரித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.
தற்போது பொதுக்குழுவின் முடிவு வெளியாகியுள்ளது. பொதுக்குழுவின் முடிவினை அதிமுக எம்பி சி.வி. சண்முகம் அவர்கள் விரிவுபடுத்திச் சொன்னார். அதன்படி அதிமுகவில் உள்ள 2646 உறுப்பினர்கள் சேர்ந்து படிவங்களைப் பெற்று அதனை நிரப்பிக் கொடுத்தனர். அந்த உறுப்பினர்களின் ஆதரவானது கே.எஸ். தென்னரசிற்கே அதிக அளவு உள்ளது. கிட்டத்தட்ட 2501 வாக்குகள் பெற்று பெரும்பான்மையானவர்களின் ஆதரவினை சம்பாதித்துள்ளார் என்று எம்பி சி.வி சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.