அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் ஒரு பார்வை!

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி சில தீர்மானங்களை முடிவெடுத்தன. அதனை எதிர்த்த எதிர்தரப்பினர் தொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக பொதுக்குழு முடிவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. சிறு நினைவூட்டலாக, அந்தப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை காண்போம்.

அதிமுக சட்டவிதி பிரிவு 20, 7ன் படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி. கே.பழனிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

* அதிமுக பொதுகுழுவின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களான ஓ.பன்னீர்செல்வம்,  வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இதர பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக தீர்மானம் செய்யப்பட்டது.

* கழக சட்ட திட்ட விதி 43ன் படி, சட்ட விதிகளை திருத்தவும், புதிதாக உருவாக்கம் அதிகாரம் படைத்த அமைப்பாக பொதுக்குழு இருக்கும். கழக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழக பொதுசெயலாளர் என்ற பதவியை மீண்டும் உருவாக்கி, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவிகள் நீக்கப்பட்டு ஒற்றைத் தலைமை செயல்படும் என்று தீர்மானம் செய்யப்பட்டது.

* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி ஜெயலலிதா போன்றோருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தல்.

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்.

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

* மேகதாது அணைக்கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்.

* இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.

* அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்

* நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்

* அதிமுக-வின் தற்போதைய நிலைகுறித்து விவாதித்து, கட்சி வளர்ச்சி குறித்து முடிவெடுத்தல்.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற விதி ரத்து செய்யப்படுகிறது.

* கழக துணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்குப் பதில், துணைப் பொதுச்செயலாளர் என்று விதி திருத்தப்படுகிறது. கழக துணைப் பொதுச் செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

* அவைத் தலைவர், பொருளாளர், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர், தலைமைச் செயற்குழுவை அமைப்பார்.

* கழகப் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமை கழகச் செயலாளர்களும், கழகப் பொதுச் செயலாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்கள்.

* பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், கொள்கை திட்டம் ஆகியவற்றைப் பற்றி தக்க முடிவுகள் எடுக்க கழகப் பொதுச்செயலாளருக்கு உரிமை உண்டு.

* கழகத்தின் தேவையை முன்னிட்டு, கழகத்தின் பொறுப்பில் மேற்படி நிறுவனங்களில் கழக உடைமைகளின் பேரில் கடன் வாங்கவும், கொடுக்கவும், முக்கிய நடவடிக்கைகளில் கழகத்தின் சார்பாக ஈடுபடவும் கழகப் பொதுச் செயலாளருக்கு உரிமை உண்டு.

* அ.தி.மு.க-வின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் கழகபப்பொதுச் செயலாளருக்கு கையொப்பமிட அதிகாரம்.

மேலே குறிப்பிட்டத் தீர்மானங்களே அன்றைய பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது இவை அனைத்தும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் அதிமுக கழகத் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

Exit mobile version