ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற வழக்குத் தொடர்பாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. வழக்கினையொட்டி தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர். அதன்படி அதிமுக மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அப்பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரையே ஈரோடு இடைத்தேர்தலில் நிறுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் தங்களுடைய வாதத்தினை முறையாக வைத்தனர்.
அதிமுகவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளதா என்ற கேள்விக்கு ஆணையத்தினர் இல்லை என்று பதில் அளித்தனர். தடை எதும் விதிக்கவில்லை என்றால் எதற்காக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் சரமாரியாக தேர்தல் ஆணையத்தைப் பார்த்து கேள்வியெழுப்பினர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கிறது. மேலும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் கோரிக்கையினை ஆணையம் ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து சொல்லியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருவதால் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தினை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் தனது வாதத்தினை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவினால் தான் வேட்பாளர் தேர்வு செய்யவேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருக்கிறது. பொதுக்குழு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தப் பிறகு அவைத் தலைவர் முறையாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதுவே உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவு என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை இரு தரப்பினருமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.