அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அறிக்கையின் முக்கிய முதல் அம்சமாக, அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வறுமையில் வாடுபவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் நேரடி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பிலிப்பைன்ஸ் நாட்டினருடன் இணைந்து, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நொய்யல் ஆற்றையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் மையமாகக் கொண்டு ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், மோகனூர் தடுப்பணையின் நீரைக் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், 5 மாவட்டங்கள் பயன்பெறும் அவகையில் காவிரி, அக்கியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டமும், மேட்டூர் அணை நீரை சரபங்கா நதி மற்றும் சேலம் மாவட்ட ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டமும் ஆகிய 4 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பயன்பெற, பெட்ரோலியப் பொருட்களை மத்திய அரசே விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்படும் என்றும், சிறு வணிகர்கள் பயன்பெற, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைக் கைவிட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை, மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வி வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வரும் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்திப் பாடுபடுவோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டின் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும், தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தமிழ்நாடு தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆகிய திட்டங்களை தேசிய திட்டங்களாக செயல்படுத்த வலியுறுத்தப் போவதாகவும் தேர்தல் அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அதிமுக பாடுபடும் என்றும், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் சித்தரவதை, பாலியல் தொழில் போன்ற சமூக அவலங்களை அகற்ற விரிவான, கடுமையான சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதிமுக கூறியுள்ளது.

Exit mobile version