மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து அவதூறாக பேசிய துரைமுருகனுக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை “நம்பிக்கை துரோகி” என்று கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தனது திரைப்படங்களின் பாடல்கள் வாயிலாக திமுகவின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவர் என்றும், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு புரட்சித் தலைவர் முதலமைச்சராக வருவார் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில்,
கருணாநிதியை முதலமைச்சராக்கிய, புரட்சித் தலைவரைப் பார்த்து நம்பிக்கைத் துரோகி என்று துரைமுருகன் சொல்வது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
திமுக என்ற அரசியல் கட்சி, ஆட்சிப் பீடத்தில் அமருவதற்கும், கருணாநிதி முதலமைச்சராவதற்கும் காரணமான புரட்சித் தலைவர் எம்.ஜிஆரை, கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதிதான் நம்பிக்கை துரோகி என தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கை சத்தம்போடாமல் திரும்பப் பெற்றது; தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்றும்,
கச்சத்தீவை தாரைவார்த்து தமிழ்நாட்டில் உள்ள மீனவ மக்களுக்கு திமுக செய்த துரோகம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று கூறி, இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது, இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகம்;
நீட் தேர்வுக்கு வித்திட்டது ஏழை-எளிய மக்களுக்கு செய்த துரோகம்;
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசுக்கு துணையாக இருந்து, பாரம்பரிய விளையாட்டு வீரர்களுக்கு செய்த துரோகம்;
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தது, வணிகர்களுக்கு செய்த துரோகம்;
கழகமே குடும்பம் என்றிருந்த திமுக-வை, குடும்பமே கழகம் என்று மாற்றியது திமுக-வினருக்கு செய்த மிகப்பெரிய துரோகம்
என இப்படி எண்ணற்ற துரோகங்களை செய்தவர்தான் கருணாநிதி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும்,
அதனால்தான் தன்னை வளர்த்து ஆளாக்கிய புரட்சித் தலைவரையே நம்பிக்கை துரோகி என்று சொல்லி இருப்பதாகவும், இந்தப் பேச்சு நம்பிக்கை துரோகத்தின் உச்சக் கட்டம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
புரட்சித் தலைவரை நம்பி வாழ்ந்தவர்கள் உண்டு, ஆனால் அவர் எந்தவொரு தனிநபரையும் நம்பி வாழவில்லை என்றும் அவருக்கு உள்ள ஒரே சக்தி மக்கள் சக்தி என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
புரட்சித் தலைவருக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போன வரலாறு உண்டு என்பது துரைமுருகனுக்கே நன்கு தெரியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
புரட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் துரைமுருகன் பேசியது, அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எப்படிப்பட்ட பாவத்தை செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு, செய் நன்றி மறைந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்ற திருவள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி இனி வரும் காலங்களில் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.