அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வீடுகளில் விடியவிடிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அறிவிக்க உள்ளனர். இதையடுத்து அ.இ.அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு மற்றும் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இருவரையும் அமைச்சர்கள் நேற்று தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கிளம்பி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று அவருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லங்களில் விடியவிடிய நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்றும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் கூறினார்.