நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 29ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்தெந்த மாவட்ட அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும், நகர மன்ற வார்டு உறுப்பினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.