விசிலடிக்காத குக்கரும், உயரப் பறக்கும் அதிமுக கொடியும்…

அடுத்தடுத்த நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சியையும், தமிழக அரசியல் களத்தில் ஒரு தெளிவையும் உண்டாக்கியுள்ளது. என்ன அந்த இரண்டு முக்கிய சம்பவங்கள்.

ஒன்று அஇஅதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவில் திருத்தப்பட்ட சட்டவிதிகளை ரத்து செய்ய முடியாது என்றும், அந்த விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லையென்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறிவிட்டது. அதாவது இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என்பது உறுதியாகி உள்ளது.

மற்றொன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் நிலைப்பாடு. ஏனென்றால் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பதில் 18 பேருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. இதற்காக டிடிவி தினகரன் கூட்டிய கூட்டத்திற்கு தங்கதமிழ்செல்வன் மற்றும் கென்னடி என இரண்டு பேர் மட்டுமே ஆஜரான நிலையில் 16 பேர் மாயமாகி விட்டனர். இதனால் மனம் வெறுத்துப் போன டிடிவி தினகரன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும், இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாகவும் தன்னிச்சையாக முடிவு எடுத்து கூறிவிட்டார். ஆனால் இதற்கு அந்த 16 பேரும் உடன்படுகிறார்களா? அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை தெளிவாக்கியுள்ளன… கூடுதல் பலம் சேர்த்துள்ளன. அதனால் தான் டிடிவி நீங்கலாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நாடோடியாய் அலைந்து கொண்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு நெஞ்சில் பாய்ந்த இடியாக இறங்கி உள்ளது அதிமுகவின் இந்த அழைப்பு. ஏற்கனவே காலியான கூடாரத்திற்கு முன்பாக கடைவிரித்து காத்திருக்கும் டிடிவி, இனி இல்லாத பொருளுக்கு என்ன விலை வைத்துவிட முடியும் என்று எள்ளி நகையாடுகின்றனர் அரசியல் உலகில்.

விசிலடிக்காத குக்கரை கக்கத்தில் சுற்றியபடி ஆர்.கே.நகருக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன், அட்டைக் கத்தி வீரனாய் காற்றில் கத்தி சுழற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின், சக்கரம் இல்லாத வண்டியில் சரக்கு ஏற்றிக் கொண்டு தள்ளாடிக் கொண்டிருக்கிறார் கமல், சதுரங்கப் பலகையில் ரசிகர்களை சிப்பாய்களாக்கி ஒருநாள் சேர்ப்பதும் ஒருநாள் நீக்குவதுமாய் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் ரஜினி, ஆகாயத் தாமரைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரசின் சடுகுடு ஆட்டங்கள் இன்னும் முடிந்தபாடில்லை..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்றும், தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டுகள் வாழும் என்னும் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

Exit mobile version