வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், திமுக எம்.பி. கனிமொழியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரிய வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வேட்பாளரை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேட்பு மனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், கனிமொழி தனது கணவர் வருமானத்தை மறைத்தது தவறு என்று மனுவில் சந்தான குமார் குறிப்பிட்டு இருந்தார்.
சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்தது.
தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி தரப்புக்கு
உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்று வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் கனிமொழி தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.