சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல் மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். வாதங்கள் செய்யப்படும் நேரம் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.