பல்வேறு சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது..
2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய வழிவகை செய்யும் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி திருத்த சட்டங்கள் என்ற சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார். இந்த சட்ட திருத்தம் மூலம் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர், தலைவர்கள் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தெரிவித்தார்.