மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு சட்டப்பேரவை ஒத்திவைப்பு

துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து வருகிற 30ம் தேதி வரை 23 நாட்கள் பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, காலை, மாலை என இருவேளை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு நாளும் விதி எண் 110-ன் கீழ் பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பதிலுரையின் போது அமைச்சர்களும் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். பொதுத்துறை, நிதித்துறை, வீட்டு வசதித்துறை மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

Exit mobile version