சென்னை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரியமான முறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவிகள் சேலை அணிந்தும் தமிழர்களின் பாரம்பரிய முறையிலும் கொண்டாடப்பட்ட விழாவில், குளத்தில் மாணவிகள் மணல் விளக்குகளை மிதக்கவிட்டனர். பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாக மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கும்மி ஆட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
விழாவில் வளையல் கடை, இளநீர் கடை, கிளி ஜோசியம் போன்ற கிராமத்து திருவிழா கடைகளும் இடம்பெற்றிருந்தன. கிராமப்புற கலாச்சார உடை அலங்காரம், உறியடி, கோலப் போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.