அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களையும், ஆஸ்திரேலியா 235 ரன்களையும் எடுத்தன. 15 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, சிறப்பாக ஆடி 307 ரன்கள் குவித்தது.
புஜாரா சிறப்பாக ஆடி 71 ரன்கள் குவித்தார். ரஹானே 70 ரன்கள் எடுத்தார். 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தற்போது விளையாடி வருகிறது. அஸ்வினின் சுழலில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக மார்க்கஸ் ஹாரிஸ் 26 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். மூன்றாவதாக கவாஜாவின் விக்கெட்டை பறித்தார் அஸ்வின். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் 14 ரன்களில் அவுட் ஆனார். இந்திய வீரர்களின் பந்து வீச்சு துல்லியமாக இருப்பதால், ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி வருகின்றனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.