தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வரும் 12 ம் தேதி முதல் 3 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, அதற்கான அட்டவனையையும் வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 12 ம் தேதிமுதல் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது டெல்லிக்கு அதிவேக சிறப்பு ரயில் தினசரி இயக்கப்படும் எனவும், பீகாருக்கு அதிவேக சிறப்பு ரயில், திங்கள் மற்றும் சனிக்கிழமை என வாரத்துக்கு இருமுறை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 15ம் தேதி முதல் திருச்சியிலிருந்து, மேற்கு வங்கத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்துக்கு இரு முறை அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 10 ம் தேதி காலை 8 மணி முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என்றும், பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும் எனவும், ரயில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசங்கள் அணிய வேண்டும் எனவும், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.