880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதன் அன்று நடைபெற்ற இதற்கான விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கவும், வழக்கறிஞர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததை அடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த கட்டடத்தில் 620 பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 40 சதவீதமான மின்சாரம் சூரிய மின் சக்தி மூலமாக பெறப்பட உள்ளது. ஆயிரத்து 800 கார்கள் வரை நிறுத்தும் வகையில் மூன்று அடுக்கு தரைத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலகம், வழக்கறிஞர்கள் அலுவலகம், மாநாட்டு அரங்கம் என பல அம்சங்கள் கொண்ட 6 பிரமாண்ட கட்டடங்கள் 12 புள்ளி 19 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளன. மூன்று லட்சம் லிட்டர் வரை மழை நீரை சேமிப்பதற்கும், அதே போன்று, கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.