தன்னைப் பற்றி இணையங்களில் அவதூறு பரப்புவதாக நடிகை மீராமிதுன் மீது நடிகை ஷாலு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா, ஜோதிகா, விஜய் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து, மீரா மிதுன் பேசி வெளியிட்ட வீடியோ அவர்களது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு இயக்குநர் பாரதிராஜாவும், எழுத்தாளர் வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடிகை ஷாலு புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், மீரா மிதுன் தன்னைப் பற்றி இணையங்களில் தவறான, ஆபாசமான கருத்துகளை பரப்புவதாகவும், அவரது ஆதரவாளர்கள் எனக் கூறி பலர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் வாய்ப்பை தான் தட்டிப்பறித்ததாக எண்ணி, அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஷாலு குறிப்பிட்டார்.