ரெளடி பேபியாக அசத்திய “சாய் பல்லவி”க்கு இன்று பிறந்தநாள்

இந்திய சினிமாவில் தினம் தினம் அறிமுகமாகக்கூடிய நடிகைகள் ஏராளம். அதிலும் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களை சினிமா உலகம் கொண்டாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் 2015ம் ஆண்டு அறிமுகமான அந்த தமிழ் பெண்ணை தென்னிந்தியாவே விழாயெடுத்து சிறப்பித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆம், தனது முதல் பயணத்தை மலர் டீச்சராக மலையாளப்படமான பிரேமம் படத்தில் தொடங்கி தமிழ் படமான மாரி-2 வில் ரெளடி பேபியாக அனைத்து வயதினரையும் ஆட்டம் போட வைத்த சாய் பல்லவிக்கு இன்று பிறந்தநாள்.

1992ம் ஆண்டு மே9ல் கோத்தகிரியில் பிறந்த சாய்பல்லவி கோவையில் உள்ள ஆல்வின் கான்வெண்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பையும் முடித்தார்.

சாய்பல்லவிக்கு சிறுவயது முதலே நடனத்தின் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அதன்பிறகு 2015ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “பிரேமம்” திரைப்படம் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக அறிமுகமானார் சாய்பல்லவி. ஆனால் மூன்று நாயகிகளில் இவருக்கு மட்டும் குவிந்தது ரசிகர் பட்டாளம். அவருடைய மலர் டீச்சர் பற்றி பேசாத சினிமா ரசிகர்கள் இல்லை. அதிலும் தமிழ்ப்பெண் என்பதால் இன்னும் அதிகப்படியாக கொண்டாடப்பட்டார் சாய்பல்லவி. பிரேமத்திற்கு பிறகு,துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த “களி”திரைப்படமும் அவருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.

என்னதான் மலையாளப் படங்களில் புகழ் பெற்றாலும் தாய்மொழி தமிழில் நடிக்கவில்லையே என்ற ரசிகர்களின் குறையை இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் “தியா(கரு)” படத்தின் மூலம் போக்கினார். இருந்தாலும் அவருக்கு அந்தப்படம் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் தான் நடிகர் தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் “அராத்து ஆனந்தி”யாக நடித்தார் சாய்பல்லவி. இந்தப் படத்தில் இடம் பெற்ற “ரெளடி பேபி” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் அவரை அனைவருக்கும் பிடித்துப்போக வைத்தது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாடலுக்கு நடனம் ஆடாமல் இருந்ததில்லை என்றுத்தான் கூற வேண்டும். யூடியூப்பில் அந்த பாடல் 30கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டு ஒரு வரலாற்று சாதனை படைத்தது.

அதன்பிறகு முன்னணி ஹீரோவான சூர்யாவின் நடிப்பில் “என்ஜிகே” படத்தில் நடித்துள்ளார். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத விசயமாக 2008ல் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தாம்தூம்” படத்தில் நடிகை கங்கணாவுக்கு தோழியாக நடித்துள்ளார்.

என்னதான் அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பப்பட்டாலும் அவரின் “பிரேமம்” மலர் டீச்சர் கேரக்டருக்கென்று இந்திய சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பிரேமம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டப்போது அந்த கேரக்டரில் நடிகை சுருதிஹாசன் நடித்தார். ஆனால் அவரை மலர் டீச்சராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதே உங்களுக்கு புரிந்திருக்கும் சாய்பல்லவியின் மகிமையை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் பல்லவி…!

Exit mobile version