காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீதான வழக்கை வாபஸ் வாங்க வைத்த இரு உதவி ஆய்வாளர்கள் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரிடம் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.
நடிகை ராதா, தனது கணவரான உதவி ஆய்வாளர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, பெண் உதவி ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர் இளம்பரிதி ஆகியோர் நடிகை ராதாவிடம், இனி வசந்தராஜா தங்களுடன் நல்லபடியாக வாழ்வார் என சமாதானம் செய்து வழக்கை வாபஸ் பெற வைத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் உதவி ஆய்வாளர் வசந்தராஜா, நடிகை ராதாவிடம் தன்னுடன் வாழ மாட்டேன் என்றும், மீண்டும் புகார் அளித்தால் கண்ணகி நகரில் உள்ள குற்றவாளிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆன்லைன் மூலம் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரிடம் அளித்த புகார் தொடர்பாக, நடிகை ராதாவிடம், வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீதான வழக்கு விசாரணை மீண்டும் முதலில் இருந்து துவங்கியுள்ளது.