தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பத்திரபதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை நியமனம் செய்து சங்கங்களின் பதிவாளர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், 2019 முதல் 2022 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் இந்த தேர்தலை நிறுத்தி வைத்து தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் சார்பில் உத்தரவிடப்பட்டது.
சங்கங்களின் பதிவாளர் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், அதேவேளையில் இந்த பிரதான வழக்கு முடியும் வரை வாக்கு எண்ணிக்கையை மேற் கொள்ளாமல், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது, இதற்கிடையில், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க கோரி நடிகர் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளதால் தற்போது தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை அல்லது ஓராண்டுக்கு இந்த நியமனம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.