மறைந்த நடிகர் விவேக்கின் உடல், காவல்துறையினர் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மயங்கி விழுந்த நடிகர் விவேக், உடனடியாக வடபழநியில் உள்ள தனியார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிசிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.
விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விவேக் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிபிரமுகர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக்கின் உடலுக்கு, காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், திரையுலகினர், பொதுமக்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடும்ப வழக்கப்படி நடிகர் விவேக்குக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. நடிகர் விவேக்கின் மகள் இறுதிச் சடங்குகளை செய்தார்.தொடர்ந்து, மின் மயானத்தில் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சின்ன கலைவாணருக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.