தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விஜய்யின் 47வது பிறந்தநாள் இன்று….
1974ம் ஆண்டு சென்னையில் பிறந்த விஜய், குழந்தை நட்சத்திரமாக முகம் காட்டி, நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு கிடைத்ததெல்லாம் மிகப்பெரிய தோல்வி மட்டுமே. ரசிகர்கள் அவரை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்டது ‘பூவே உனக்காக’ படம் வெளியான பின்னரே.
ஆனாலும், தொடர்ந்து வெளியான சில படங்கள் மீண்டும் தோல்வியடைந்தன. அந்த நேரத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு என்று தனி சிம்மாசனத்தை உண்டாக்கி தந்தது. தொடர்ந்து ‘நேருக்கு நேர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’ போன்ற படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றார். மென்மையான நடிப்பு, துள்ளலான நடனம், தனித்துவமான உடல்மொழி என தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
விஜய் என்றாலே காதல், காமெடி மட்டுமே என்றிருந்த ரசிகர்களின் மனநிலையை, அவர் ஆக் ஷன் அவதாரம் எடுத்த ‘திருமலை’ படம் சுக்கு நூறாக்கியது. அடுத்தடுத்து வெளியான ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ போன்ற விஜய்யின் ஆக் ஷன் படங்கள், அவரை தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாட வைத்தன. ஏற்கனவே நடனத்தில் கில்லியென பெயர் பெற்ற விஜய், அதிரடி ஆக் ஷன் காட்சிகள் மூலம் தன்னை மாஸ் நடிகராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் முன்னகர்த்தி சென்றார்.
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், திறமை இருந்தால் மட்டுமே இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு விஜய்யின் கடந்தகால தோல்விகளும், தற்போதைய அவரின் சாதனைகளும் உதாரணம்.
இதுவே ரசிகர்களால் அவரை எப்போதும் மாஸ்டராக கொண்டாடக் கூடியதற்கான காரணங்களும் ஆகும்.