நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஏழுமலை என்கிற உறுப்பினர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பதவிக்காலம் முடிந்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும் முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினார். தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டதாகவும், மரணமடைந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்ய நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.