நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அண்மையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பேசிய சோனு சூட், பள்ளி மாணவர்களுக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் அவர் போட்டியிடக்கூடும் எனக் கருதப்பபட்ட நிலையில், சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்பூர், டெல்லி மற்றும் குருகிராமில் ஆகிய 6 இடங்களில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில், சோனு சூட் 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனு சூட் போலியான நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிமீறலில் ஈடுபட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.