ரசிகர்களின் அபிமான கதாநாயகன் – தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த மோகன் பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், பிரகாசித்த நட்சத்திரம் நடிகர் மோகன்.. முன்னணி நடிகர்களின் சந்தையை ஆட்டம் காண வைத்த அவரின் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பை காணலாம்…

1966ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிறந்தார் மோகன். வங்கி வேளையில் சேர்ந்திருக்க வேண்டியவர் சினிமா பக்கம் கரை ஒதுங்கினார். 1977ல் கன்னட சினிமாவான ‘கோகிலா’வில் பாலுமகேந்திரா மூலம் அறிமுகமாகினார் மோகன். பிறகு அவரது இயக்கத்தில் தமிழில் வெளியான ‘மூடுபனி’யில் சிறிய வேடத்தில் வந்து போனார். பிறகு மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் ஒரு பிரதானமான வேடம். பிறகு ‘கிளிஞ்சல்கள்’ திரைப்படம்தான், ஒரு கதாநாயகனுக்குரிய வெற்றிப்பாதையை மோகனுக்கு கொடுத்தது. இதற்குப் பிறகு வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

ரசிகர்களின் அபிமான நாயகனாக மாறினார் மோகன். தொழிலதிபராக நடித்தாலும் ஏற்றுக்கொண்டார்கள், வேலை தேடி அலையும் ‘குங்குமச்சிமிழ்’ மவுத் ஆர்கன் நாயகனையும் ஏற்றுக்கொண்டார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யையும் ரசித்தார்கள். ரெண்டுபொண்டாட்டி ‘ரெட்டைவால் குருவி’ நாயகனையும் சிரித்து ஏற்றார்கள். மனைவி கேட்கும் விவாகரத்தை வழங்கும் ‘மெளனராகம்’ கணவனையும் மதித்துப் போற்றினார்கள். பல படங்களில் மைக் பிடித்தாலும் ‘நூறாவது நாள்’ படத்தில் கத்தியும் துப்பாக்கியும் பிடித்தார். ஆன்டி ஹீரோவாகவும் மோகன் ரசிக்கவைத்தார்.

இந்த வேடம்தான் என்றில்லாமல், எந்த வேடமும் பொருந்துகிற நாயகனாக மோகன் திகழ்ந்தது மோகனின் பிளஸ் பாயிண்ட். 1984ஆம் ஆண்டு, ஒரு நடிகருக்கு இவ்வளவு திரைப்படம் வருமா என்று ஆச்சரியம் அடையும் அளவிற்கு மோகனுக்கு 19 படங்கள் வெளியாகின. இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர்.

நிலவு தூங்கும் நேரம், மலையோரம் வீசும் காற்று, சங்கீத மேகம், ஈரமான ரோஜாவே, இளைய நிலா பொழிகிறது, வா வெண்ணிலா என்று மோகன் பர்ஃபாமன்ஸில் ஸ்கோர் செய்த பாடல்கள் ஏராளம். இளையராஜா இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் நடிக்கும்போது கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி-யையும் மறந்து ஏதோ மோகனே சொந்தக் குரலில் பாடியதுபோல இருப்பது மோகனின் ஸ்பெஷாலிட்டி.

80-90ஸ் வரை இவரது ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக்கள் கண்டவை. பிறகு சினிமாவை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கினார். படங்கள் நடித்துக் கொண்டிருக்கிற சமயத்திலேயே, ஃபீல்டில் இருக்கிற சமயத்திலேயே பல பிரபலங்கள் மறக்கப்படும் நிலையில், பல ஆண்டுகளாக நடிக்காத போதும், மோகனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

 

Exit mobile version