நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த தடை

நடிகர் சங்க தேர்தலை சென்னை எம்.ஜி. ஆர் ஜானகி கல்லூரியில் நடத்துவதற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தேர்தலின் போது, காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்கள் அதிகமாக கூடும் இடத்தில், தேர்தலை நடத்தினால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அந்த இடத்தில் தேர்தலை நடத்த அனுமதி மறுத்தது. மேலும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து நாளை தெரிவிக்க கூறியுள்ளது. அதே சமயம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்யலாம் என நடிகர் சங்கத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், முறையாக அனுமதி பெற்று வரும் 23 ஆம் தேதி நாடகம் நடத்த உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷால் எங்கு சென்றாலும் பிரச்சனைதான் என்றும், நடிகர் சங்கம் அனுமதி பெறாமல் எப்படி தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version