நடிகர் கமல்ஹாசனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த 2008ஆம் ஆண்டு, மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் – பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக, 6 கோடியே 90 லட்சம் ரூபாயும்,  கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மர்மயோகி படத்தை தயாரிக்காமல், உன்னைபோல் ஒருவன் படத்திற்கு, அந்த பணத்தை கமல்ஹாசன் செலவு செய்ததாக புகார் எழுந்தது. எனவே, முன் பணமாக கொடுத்த 6 கோடியே 90 லட்சம் ரூபாயை கேட்டு சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த  4 கோடி ரூபாயை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 44 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகே, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட வேண்டும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்தது.  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகர் கமலஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை திங்கட்கிழமைக்கு  ஒத்திவைத்தார்.

Exit mobile version