இந்தியன்-2 விபத்து: மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு கமல் ஆஜராகி விளக்கம்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில், கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்புக்கு செட் அமைத்தவர்கள், கிரேனை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 27ம் தேதி, இயக்குநர் சங்கர் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, கமல்ஹாசனிடம் விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version